தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக காய்கறிகள் விலை கடுமையான அளவுக்கு உயர்ந்தது. குறிப்பாக, தக்காளி விலை கிலோ 180 ரூபாய் வரை விற்றது. தக்காளி விலை பொதுமக்களை வாட்டி வதைத்ததால், தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலைக்குத் தக்காளி விற்பனையைத் தொடங்கியது. இதனால் தக்காளி விலை தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு அடுத்த நாளே வெகுவாக குறைந்தது. தற்போது கிலோ தக்காளி 80 முதல் 90 வரை விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இன்னும் சில நாட்களில் தக்காளி விலை குறையும் என்று கூறப்படுகிற நிலையில், முருங்கைக்காய் விலை நேற்றுமுதல் (07.12.2021) கடுமையான அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக 150, 180 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவந்த முருங்கைக்காய், தற்போது சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கேரளாவிலும் மழை காரணமாக காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் கிலோ தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவுக்கு அதிக அளவிலான தக்காளி ஆந்திராவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.