ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதால் தடையைமீறி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் காவிரி படுகையை பீதியாக்கி வருகிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் பணிகளையும் அந்தந்த நிறுவனங்கள் செய்துவருகின்றனர். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் விதமாகவும், திட்டங்களை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் அந்த ஒன்றியங்களில் இருசக்கர வாகனத்தில்சென்று தெருமுனை பிரச்சாரம் செய்ய முடிவுசெய்து, அதற்காக காவல்துறையின் அனுமதியை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் சட்டம் ஒழுங்கில் பிரச்சனை ஏற்படும், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் எனக்கூறி அந்தந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் கடைசி நேரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு அனுமதியளித்த மறுத்தனர்.
கோபமடைந்த விவசாயிகளும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் போலீசாரின் தடையைமீறி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அங்காங்கே பொதுமக்களிடம் திட்டம் குறித்து பேசியும், துண்டுபிரசுரங்கள் வழங்கியபடியும் வந்தனர். போலிசாரோ வழக்குப்போடும் முடிவில் உள்ளனர்.