Skip to main content

தொடர்ந்து உயரும் தக்காளி விலை; தமிழக அரசு இன்று முக்கிய முடிவு 

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

tomato price hike tamilnadu govt dissusion today

 

கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

 

இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் தெரிவிக்கையில், “கூட்டுறவுத்துறையின் மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலையான ரூ. 60க்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியைப் பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்து இருந்தார். இதையடுத்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு மீண்டும் தக்காளி வரத்து குறைந்ததால் மொத்த விற்பனையில் தக்காளியின் விலை மேலும் உயர்ந்து 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

 

இந்நிலையில் தக்காளி வரத்து மேலும் குறைந்ததால் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி கிலோ ஒன்றுக்கு 130 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும்,  அரசு தரப்பில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் இன்று  முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்