திருப்பூர் மாவட்டம் அவினாசி முதல் அவினாசிபாளையம் வரை சுமார் 32 கிலோமீட்டர் தூரத்திற்குத் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் வேலம்பட்டி என்ற இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இருப்பினும் இந்த சுங்கச்சாவடி நீர் நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. எனவே இந்த கட்டிடத்தை இடிக்கக் கோரி தொடர்ச்சியாகக் கடந்த சில வருடங்களாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சுங்கச்சாவடி திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இத்தகைய சூழலில் தான் கடந்த 10 நாட்களுக்கு முன் சுங்கச்சாவடி திறக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்து. இந்த தகவலையடுத்து பொதுமக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இருந்தனர். அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில், “சுங்க கட்டணம் வசூலிப்பது குறித்து அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடி மீண்டும் திறக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “நீர் நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். பால் வண்டி, காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அப்பகுதியைச் சேர்ந்த 6 கிராம மக்களுக்கும், திருப்பூர் பதிவு கொண்ட வாகனங்களுக்கும் விலக்களிக்க வேண்டும். அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிழல் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். கழிப்பிட வசதியுடன் கூடிய லாரி நிறுத்த வேண்டும், மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது, முறையான சாலைகளை அமைக்க வேண்டும்” என முழக்கமிட்டனர். சுமார் 50 மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.