சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது செங்குறிச்சி டோல்கேட். ராமநத்தம் அருகிலுள்ளது திருமாந்துறை டோல்கேட். இந்த இரு டோல்கேட்களிலும் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், "தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். பி.ஃஎப் பிடித்தம் செய்யப்பட வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து தொகைகளையும் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி ஆகிய தொழிற்சங்கத்தினர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்று திருமாந்துறை டோல்கேட்டில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான டோல்கேட் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு டோல்கேட் நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் விரக்தியடைந்த ஊழியர்கள் மாலை இரண்டு மணியில் இருந்து பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால், உளுந்தூர்பேட்டை திருமாந்துறை ஆகிய இருடோல்கேட் பகுதியில் நேற்று மதியம் 2 மணியில் இருந்து சென்னை - திருச்சி மற்றும் திருச்சி - சென்னை மார்க்கமாகச் சென்ற வாகனங்கள் அனைத்தும் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன. வாகனங்களுக்கான கட்டணங்கள் வசூல் செய்யவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியில் தங்கள் வாகனங்களைக் கட்டணம் செலுத்தாமல் ஓட்டிச் சென்றனர். ஊழியர்கள் போராட்டத்தினால் டோல்கேட் பகுதியில் வாகன நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊழியர்கள் போராட்டத்தின் போது போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.