கிணறு தோண்ட பூதம் கிளம்பியதுபோல், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விவகாரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக முறைகேடுகள் வெளிப்பட்டு வருகின்றன. முறை கேடுகளை விரிவாகவே நக்கீரனில் வெளிப்படுத்தியதுடன், "கண்காணிப்பில் சங்கரன்கோவில்' என்று அப்போதே குறிப்பிட்டிருந்தோம். சி.பி.சி.ஐ.டி.யின் வசம் சிக்கிய சித்தாண்டி, க்ரைம் பிராஞ்சைத் திசைதிருப்பும் வகையில் சில தகவல்களை மட்டும் சொல்லிவிட்டு, இவ்விஷயத்தில் தொடர்புடைய தன் உறவுகள், நெருக்கமானவர்களைத் தப்பவைக்கிற வகையில் மறைக்கிறாராம். அவர் வாய்திறக்காமல் இவ்விஷயத்தில் தொடர்புடைய பெரும்புள்ளிகள் சிக்கமாட்டார்கள் என்கிறார்கள் இவ்விவகாரத்தைக் கண்காணிப்பவர்கள்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகிலுள்ள விஜயாபதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை வளைத்துக் கொண்டு போனது சி.பி.சி.ஐ.டி. இவர் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு குரூப் 4 தேர்வில் ஏஜெண்ட்கள் மூலம் முதலிடத்தில் தேறி வி.ஏ.ஓ. பணிக்கு செலக்டானவர். தற்போது அதே ஊரைச் சேர்ந்த சுயம்புராஜன் என்பவர் சித்தாண்டி மூலம் ஜெயக்குமாருக்கு 7 லட்சம் கொடுத்து தேர்வாகி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையின் புன்னப்பாக்கம் வி.ஏ.ஓ.வாகப் பணியிலிருந்தது தெரியவர, அவரையும் தங்கள் கஸ்டடிக்குக் கொண்டு வந்திருக்கிறது சி.பி. சி.ஐ.டி. இந்தத் தகவலை மட்டும் விசாரணையில் தெரிவித்த சித்தாண்டி, அதே ரூட்டில் குரூப் 4 எழுதி போலீஸ் பணியி லிருக்கும் அவரது சகோ தரன், அடுத்து வருவாய்த் துறையிலிருக்கும் அவரது மனைவி பற்றி வாய் திறக்கவில்லையாம். ஆனால் சி.பி.சி.ஐ.டி. யினர் சுயம்புராஜனின் அண்ணனை விசாரித்த நேரத்தில் தன் மனைவியே பணம் கொடுத்ததாகத் தெரிவித் திருக்கிறாராம். அதனால் அவரது மனைவியையும் விசாரிக்கும் திட்டத்திலிருக்கிறது சி.பி.சி.ஐ.டி.
அதேசமயம் இந்தக் குடும்பத்தாரின் உறவினர் ஒருவரும் இதே வழியில் தேர்வாகி வருவாய்த் துறையிலிருப்பதையும் கிளறி யிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. இதில், சுயம்புராஜனின் சகோதரனும், சித் தாண்டியும் ஒரே பேட்ஜ் மேட்டாம். அதனாலேயே சித் தாண்டி, மோசடிகள் விஸ்வரூபமெடுத்து விடுமோ என்ற கோணத் தில் விஷயங்களை மறைப்பதாகவும் குறிப் பிடுகிறார்கள். இது ஒரு பக்கமென்றால், கடந்த வாரம் லோக்கல் போலீசுக்கும் தெரியாமல் சங்கரன்கோவில் வட்டாரத்தை நான்கு நாட்களாக அலசியிருக்கிறது சி.பி. சி.ஐ.டி. வடக்குப் புதூர், வீரிருப்பு, சேர்ந்தமரம், பொய்கைமேடு, நவநீதகிருஷ்ணாபுரம் மற்றும் புளியங்குடி பகுதிகளில் இந்த முறைகேட்டின் மூலம், தேர்வான வர்கள் பற்றி ரகசிய மாக விசாரித்திருக்கிறது.
சித்தாண்டி சமுதாயத்தைச் சேர்ந் தவர்களே இந்தப் பகுதிகளில் மெஜா ரிட்டியாக இருக்கிறார்கள். கிருஷ்ணா புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மற் றும் உறவினர் ஒருவர் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி அரசுப் பணியிலிருப்பதையும், லிஸ்ட் எடுத்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி. தங்க ளின் லிஸ்ட்டிலிருப்பவர்கள் பற்றிய விபரங்களையும் சேகரித்துச் சென்றிருக்கிறதாம். அனுமனின் வாலுக்குப் போட்டியாக நீளும் லிஸ்டின் நீளம் பார்த்து சி.பி. சி.ஐ.டி.யே திகைத்துப் போயிருக்கிறதாம்.