டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.
இந்த தரவரிசை பட்டியலில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் 39 பேர், முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். முதற்கட்ட விசாரணையை நடத்திய தேர்வாணையம் இரண்டு தேர்வு மையங்களிலும் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து, டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்தது. அதன் தொடர்ச்சியாக, வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த முறைகேடுகளில் மூன்று அரசு ஊழியர்கள் உட்பட 14 நபர்களை சிபிசிஐடி கைது செய்துள்ளது. ஒட்டுமொத்த முறைகேடுகளுக்கும் ஒருங்கினைப்பாளராக முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் செயல்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் 99 தேர்வர்களிடம் இவர் பணம் வாங்கியுள்ளதும், இவர் மூலம், ரூ. 10 கோடி வரை பண பரிமாறியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஜெயக்குமார் தற்போது வரை தலைமறைவாக இருக்கின்றார். இவரைக் கைது செய்தால், அனைத்து மட்டங்களிலும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் முழுவிவரம் தெரியவரும் என்று சிபிசிஐடி நம்புகிறது.
இந்நிலையில் சென்னை முகப்பேர் பகுதி கவிமணி சாலையில் உள்ள ஜெயக்குமார் குடியிருந்த வீட்டில் டிஎஸ்பி தலைமையில் 12- க்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள், மதுரவாயல் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர், நீதிமன்ற உத்தரவோடு வீட்டின் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்தச் சோதனை மூலம் முக்கிய ஆவணங்கள், இவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் குறித்த தகவல்கள் கிடைக்கலாம், அதன்மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் முகப்பேர் கவிமணி சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர்.