குரூப்- 4 தேர்வு முறைகேடு வழக்கில் தலைமைறைவாக உள்ள ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட இதுவரை 14 பேர் கைதாகியுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் முக்கிய இடைத்தரகராக கருதப்படும் ஜெயக்குமார் தலைமைறைவாகியுள்ள நிலையில் சென்னை முகப்பேரில் உள்ள அவரது இல்லத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேல் சோதனை நடந்த நிலையில் லேப்டாப், பென் டிரைவ், முக்கிய ஆவணங்கள், 60- க்கும் மேற்பட்ட பேனாக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் குரூப்- 4 தேர்வு முறைகேடு வழக்கில் தலைமைறைவாக உள்ள ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜெயக்குமார் பற்றிய தகவலை 99402- 69998, 94438- 84395, 99401- 90030, 94981- 05810, 94441- 56386 ஆகிய எண்களில் துப்பு கொடுக்கலாம். ஜெயக்குமார் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிபிசிஐடி தெரிவித்துள்ளது.