துணைக் கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 தேர்வில் விடைத்தாள் மோசடி நடந்திருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது மோசடியாக தேர்ச்சிபெற்ற உயரதிகாரிகள் மத்தியில் மட்டுமல்ல உண்மையாக தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களின் மத்தியில் மீண்டும் பரபரப்பை பற்றவைத்திருக்கிறது.
கடந்த வருடம் நடந்த குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவைதான் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யே தற்போது ஒப்புக்கொண்டது நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், குரூப்- 1 தேர்வில் விடைத்தாள் மோசடி நடத்திருப்பது உண்மைதான் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை கொடுத்திருப்பது குறித்து நாம் விசாரிக்க ஆரம்பித்தோம்… “தமிழகத்தின் கடைகோடி கிராமங்களிலிருந்தும் சென்னை தலைநகரத்ததை நோக்கிவரும் ஏழை எளிய மாணவர்கள்… அண்ணாநகர் போன்ற ஹைடெக் ஏரியாக்களில் அறை எடுத்தும் விடுதிகளில் தங்கியும் அரசுப்பணிக்காக இரவு பகல் பாராமல் பசி பட்டினியோடு கஷ்டப்பட்டு படித்துக்கொண்டிருக்கும் சூழலில்… பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி மோசடியாக தேர்ச்சிபெற்று உயர்பதவிகளை பிடித்தவர்களையும் அதற்கு துணையாக இருந்தவர்களையும் கண்டுபிடித்தபிறகும்கூட… மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையின் அதிகாரிகள் இடமாற்றத்தால் விசாரணை தடம் மாறி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 வினாத்தாள் லீக் மற்றும் விடைத்தாள் மோசடி வழக்கு தடுமாறிக்கொண்டிருக்கிறது என்று ஷாக் கொடுக்கிறார்கள் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடப்பதற்கு முன்பே சென்னை தி.நகரிலுள்ள அப்பல்லோ தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வினாக்கள் முன்கூட்டியே ‘லீக்’ ஆகியிருப்பதையும் 2016 குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்ற 74 பேரில் அப்பல்லோ ஸ்டடி செண்டரைச் சேர்ந்த 62 பேர் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள் என்றும் மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்துவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட பயிற்சிமையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரன் உள்ளிட்டவர்கள் முன் ஜாமீன் வாங்கிவிட்டதால் கைதுசெய்யமுடியாத மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறை முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், திடீரென்று அரசு தரப்பு வழக்கறிஞரோ, சாம் ராஜேஸ்வரனின் பெயிலை கேன்சல் செய்யவேண்டாம். நேரில் ஆஜராகும்படி மட்டும் உத்தரவிட்டால் போதும் என்று அந்தர்பல்டி அடித்ததால்தான், குரூப்- 1 தேர்வு முறைகேடு விசாரணையில் பின்னடைவு ஏற்பட ஆரம்பித்தது.
இதுகுறித்து, நம்மிடம் பேசும் நேர்மையான மத்தியக் குற்றப்பிரிவு காக்கி ஒருவரோ, “ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளுக்கு அடுத்து மாநில அரசுப்பணிகளிலேயே மிக உயர்ந்த பதவிகளான மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரகவளர்ச்சி உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக 2016 ஆம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் 22 விடைத்தாள்களில் பதிவு எண்கள் அழிக்கப்பட்டு புதிதாக எழுதப்பட்டுள்ளது என்றும் மூன்று பேரின் விடைத்தாள்களில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு சில பக்கங்கள் இணைக்கப்பட்டதோடு அந்த மூன்று விடைத்தாள்களிலும் ஒரே மாதிரியான கையெழுத்து இருப்பதும் தடயவியல் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டாதாக மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறை அசிஸ்டெண்ட் கமிஷனர் ஜெய்சிங் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஜூன் -1 ந்தேதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மாபெரும் மோசடிகளுக்கு காரணமானவர்கள் யார் யார்? என்பதையெல்லாம் விசாரணையில் முன்கூட்டியே கண்டுபிடித்த மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகளான டி.சி. ஷ்யாமளாதேவி, ஏ.சி. மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் செங்குட்டவன் உள்ளிட்டவர்களை இடமாற்றம் செய்துவிட்டு உண்மைக்குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில் தடம் மாறிக்கொண்டிருக்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்” என்றவரிடம் எப்படி? என்று நாம் கேட்டபோது, அதன் பின்னணியை அவரே விவரிக்க ஆரம்பித்தார், “ஒரு இடைத்தரகரின் வாக்கு மூலம்!- அம்பலமாகும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு’ என்கிற தலைப்பில் 2017 ஜூலை-18 ந்தேதி இரவு 9 மணிக்கு சத்யம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிலையில்தான், 2016 ஜூலை 29, 30, 31 நடந்த குரூப்-1 தேர்வில் நடந்த முறைகேடு குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் திருநங்கை ஸ்வப்னா கார்த்திக். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன், ‘டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளன. அதனால், விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளுக்கும் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கும் கடந்த 2017 ஆகஸ்டு 21 ந்தேதி உத்தரவிட்டார்.
அதற்குப்பிறகுதான், 2017 நவம்பர் 11 ந்தேதி அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்கள் டி.என்.பி.எஸ்.சி. செக்ஷன் ஆஃபிசர்கள் சிவசங்கரன் மற்றும் புகழேந்தி, தேர்வில் பாஸ் பண்ண வைக்க லஞ்சம் கொடுத்த ராம்குமார், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆஃபிசர் பெருமாள் உள்ளிட்டவர்கள் செய்யப்பட்டதுடன் செக்ஷன் ஆஃபிசர் காசிராம்குமார் 2018 ஏப்ரல்-26 தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டபோதுதான் அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனுடன் சேர்ந்து குரூப்-1 தேர்வில் முன்கூட்டியே கேள்விகளை லீக் செய்ததும் விடைத்தாள்களை வெளியில் எடுத்து சரியான விடைகளை நிரப்பி வைத்து மோசடிகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஆனால், சாம் ராஜேஸ்வரன் இன்றுவரை கைது செய்யப்படாததாலும் தேர்தல் மற்றும் பணி உயர்வுகளை காரணம் காட்டி டி.சி. ஷ்யாமளா தேவி, ஏ.சி. மகேஸ்வரி, விசாரணை அதிகாரியும் இன்ஸ்பெக்டருமான செங்குட்டவன் உள்ளிட்டவர்கள் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு தேர்தல் முடிந்தும் பழைய பணிக்கும் திரும்பாததால் வழக்கு வேறு திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, விசாரித்த அதிகாரிகளே மீண்டும் விசாரணை செய்தால்தான் சரியான திசையில் விசாரணை பயணிக்கும்” என்கிறார்.
இதுகுறித்து, சத்யம் தொலைக்காட்சிக்காக ஆஜரான பிரபல வழக்கறிஞர் பி.டி. பெருமாளோ, “ஏழை எளிய மற்றும் உண்மையாக படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு உயர் பதவிகளில் அமரவேண்டும் என்றால் உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படவேண்டும். மோசடியாக பதவியை பெற்றவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். ஆனால், தற்போது விசாரணை செய்யும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளோ உண்மைக்குற்றவாளிகளை தப்பிக்கவிடுதிலேயே குறியாக இருக்கிறார்கள்” என்கிறார் குற்றச்சாட்டாக.
ஏற்கனவே, இப்படித்தான் குரூப்-1 தேர்வில் மோசடி நடந்தது நிரூபிக்கப்பட்டும் சுப்ரிம் கோர்ட்வரை வழக்கை கொண்டுசென்று தப்பித்தார்கள். அதேபோல், இந்தமுறையும் தப்பித்துவிடலாம் என்ற ஆணவத்தில் இருக்கிறார்கள். ஆனால், அந்த வழக்குபோல் இந்த வழக்கு இருக்காது என்றும் இந்தமுறை இவர்கள் தப்பிக்கவே முடியாது என்றும் குரூப்-1 தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கக்கோரி தனியார் பயிற்சிமையத்தினர் மற்றும் தேர்வர்கள் அதிரடி போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.