தென் அமெரிக்க கண்டம், அர்ஜெண்டினாவில் உள்ள 6,962 மீட்டர் உயரமுள்ள அக்கோன்காகுவா (Aconc Agua) சிகரத்தில் ஏறி சாதனை புரிந்து சென்னை திரும்பிய மலையேற்ற சாதனைப் பெண் முத்தமிழ்செல்விக்கு சென்னை விமான நிலையத்தில் மாணவர்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏறத் திட்டமிட்டு, நான்காவதாக இந்த மலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் நபராக ஏறி சாதனை புரிந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வி (வயது34). தற்போது, சென்னை மண்ணிவாக்கத்தில் வசிக்கிறார். நான்காவது சாதனைப் பயணமாக தென் அமெரிக்கக் கண்டம், அர்ஜெண்டினாவில் உள்ள 6962 மீட்டர் உயரமுள்ள அக்கோன்காகுவா (Aconc Agua) சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
உலகிலேயே அதிக உயரமுள்ள 1. ஆசியா கண்டம், மவுண்ட் எவரெஸ்ட் சிகரம் 8848 மீட்டர், 2. ஐரோப்பா கண்டம், மவுண்ட் எல்ப்ரஸ் சிகரம் 5642 மீட்டர், 3. ஆப்பிரிக்க கண்டம் மவுண்ட் கிளிமஞ்சாரோ 5895 மீட்டர் ஆகிய மூன்று கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை அடைந்திருக்கிறார். 4. தென் அமெரிக்க கண்டம் அர்ஜெண்டினாவில் உள்ள 6962 மீட்டர் உயரம் உள்ள அக்கோன்காகுவா (Aconc Agua) சிகரத்தில் ஏறியிருக்கிறார். இது உலக அளவில் எவரெஸ்ட் சிகரத்திற்கு அடுத்துள்ள உயரம் அதிகமானதாகும். மலையேற்ற சாதனை தமிழ்ப் பெண் முத்தமிழ்செல்விக்கு சென்னை விமான நிலையத்தில் படப்பை ஆல்வின் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சால்வைகள் போர்த்தியும், மலர்க்கொத்துகளை கொடுத்தும் வரவேற்றனர். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த முத்தமிழ்செல்வி, “உலகின் ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை அடைந்து சாதனை புரியத் திட்டமிட்ட நிலையில், தற்போது நான்காவது சிகரத்தை அடைந்துள்ளேன். மிகவும் கடுமையான மைனஸ் 35 டிகிரி குளிரில் கடும் காற்றிலும் போதிய உணவு கிடைக்காமலும், இச்சாதனையை முதல் தமிழராய் சாதித்துள்ளேன். இந்தத் தகவலை அறிந்த தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரும் அமைச்சர் தங்கம் தென்னரசு, படப்பை மனோகரன் போன்றோரும் நிதியுதவி வழங்கினார்கள்.
இந்த நேரத்தில், அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் மாதம் ஆஸ்திரேலியா, அதனைத் தொடர்ந்து வட அமெரிக்கா என மூன்று சிகரங்களை ஏறி, இந்த ஆண்டுக்குள் ஏழு கண்டங்களையும் ஏறி சாதனையை முழுமை செய்வேன். வாழ்க்கையில் வெற்றியைத் தவறவிட்டால் சோர்ந்துவிடக் கூடாது. நல்ல சாதனை மனிதர்களாக மாற மீண்டும் மீண்டும் தங்களை மெருகேற்றிக் கொள்ளவேண்டும். பெண்கள் நினைத்தால் யாருக்கும் பயப்படாமல் உலகையே சுற்றி வரலாம். சாதனை புரிந்து தங்களின் திறமையை வெளிக்காட்டி மதிப்புமிகு வாழ்க்கையை வாழலாம்.” என்றார்.