தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தேமுதிகவின் நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன், பாமகவின் நிறுவன தலைவர் டாக்டர்.ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் தம் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொள்ளும் தீவிர பிரச்சாரப் பணிகள், நாளை (04/04/2021) இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது.
அதைத் தொடர்ந்து, பிரச்சாரத்திற்காக வந்த வெளிமாவட்ட கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் ஆகியோர் நாளை (04/04/2021) இரவு 07.00 மணியுடன் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், தங்களுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.