விழுப்புரம் அருகே உள்ள வீரமூர் கிராமத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி அதிகாலை மாட்டு வண்டியில் ஏரியில் மண் அள்ள சென்ற கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மாடு காயம்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் குற்றவாளியை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டிஎஸ்பி வீமராஜ் மற்றும் செஞ்சி டிஎஸ்பி வினோதினி ஆகியோர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தன.
விசாரணையில் மாட்டின் மீது பாய்ந்த குண்டின் அடிப்படையில் எந்த வகையான குண்டு என அறிய தடவியல் துறைக்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் அது போலீசாரின் துப்பாக்கி இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து யாரெல்லாம் இந்த பகுதியில் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு உரிமம் வாங்கியுள்ளனர் என்று சுமார் 200 பேரை அழைத்து விசாரணை செய்ததில் சிறுவாலை சேர்ந்த சேகர் உள்ளிட்ட கும்பல் காட்டுப்பன்றி வேட்டையின் போது தவறுதலாக மாட்டின் மீது துப்பாக்கிசூடு நடத்தியது தெரியவந்தது.
இதுதொடர்பாக துப்பாக்கிச்சூடு பயிற்சி பெற்ற புதுவையை சேர்ந்த திருநாவுக்கரசு என்கிற தங்கராஜ் கீழ்புதுப்பேட்டை சேர்ந்த அருள்பாண்டி மதுரப்பாக்கம் சேர்ந்த அருள், கீழ்புத்துப்பட்டு கார்த்திக் மற்றும் குருவிநத்தம் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு நவின ரக கைத்துப்பாக்கி மற்றும் 96 குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் வந்து 6 பேரை தேடி வருகின்றனர். 6 பேர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் எஸ்.பி. ஜெயகுமார் தெரிவித்தார்.