Skip to main content

‘கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும்’ - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
TN Govt will give full cooperation to Kerala Govt activities CM MK Stalin

மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (06.02.2024) எழுதியுள்ள கடிதத்தில், “மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதோடு, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது.

மத்திய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது. மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது. மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293 வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தப் பிரிவின்படி, மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு - செலவு மேலாண்மை விதிகளின்படி வரையறுக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள், மாநில அரசின் முன்முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து 15 விழுக்காடு வளர்ச்சியை அடைந்த போதிலும், 2023-2024 ஆம் ஆண்டில் நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

TN Govt will give full cooperation to Kerala Govt activities CM MK Stalin

இரண்டாவதாக, மின் துறை சீரமைப்புகளுக்காக கூடுதல் கடன் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாநில மின் விநியோக நிறுவனங்களின் (DISCOMS) மொத்த இழப்புக்கு நிதியளிக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையால், நடப்பாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.17,111 கோடி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு மாநிலத்தின் நிதி வாய்ப்புகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. எதிர்காலத்திலும் மாநிலங்களை பாதிக்க வாய்ப்புள்ளது.

மூன்றாவதாக, மத்திய அரசின் திட்டமான, சென்னை மெட்ரோ இரயில் 2 ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், இத்திட்டத்திற்கான மொத்த கடனான 33,594 கோடி ரூபாய் முழுவதும், மாநிலத்தின் நிகரக் கடன் உச்சவரம்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில் இத்தகைய பாரபட்சமான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது. இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

TN Govt will give full cooperation to Kerala Govt activities CM MK Stalin

மாநிலங்களின் கொள்கை முன்னுரிமைகளின்படி வளங்களைத் திரட்டுவதற்கும், முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் உள்ள திறனை முடக்குவதையே மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டும். நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ்நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்” எனத் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார். 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.