தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் இருந்து ஒரு காரில் மர்ம கும்பல் ஒன்று கஞ்சா வாங்கிவிட்டு தேனியை நோக்கி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல். அதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் பகுதியில் அந்த கும்பலின் வாகனத்தை காவல்துறையினர் வழிமறித்த போது வானத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து பழனிச்செட்டிபட்டி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடியில் வழி மறித்த போது அந்த கும்பல் மீண்டும் தப்பிச் சென்றது, அதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் விரட்டிச் சென்று தேனி புறவழிச்சாலையில் அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் காரில் கஞ்சா மற்றும் கைத் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த மூன்று நபர்களையும் விசாரித்ததில் கேரள மாநிலம் கொள்ளத்தைச் சேர்ந்த விஷ்ணு, எர்ணாகுளத்தைச் சேர்ந்த அணிஸ் மற்றும் கொச்சியை சேர்ந்த சுமேஷ் என்பது தெரியவந்ததை தொடர்ந்து மூன்று நபர்களையும் கைது செய்து பழனிச்செட்டிபட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் கம்பத்தில் கஞ்சா வாங்கிவிட்டு பணம் தராமல் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தெரியவந்தது. மேலும் அவர்களின் கார், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் நான்கு கிலோ கஞ்சா ஆகியவற்கை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.