Skip to main content

நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

tn govt sale tomato on cehnnai ration shops

 

கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

 

இதையடுத்து கூட்டுறவுத்துறையின் மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலையான ரூ. 60க்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் தக்காளி வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி கிலோ ஒன்றுக்கு 130 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அரசு தரப்பில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் இன்று  முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தக்காளி விலை உயர்வைக் குறைப்பதற்கும், மேலும் விலையேற்றம் இல்லாமல் இருப்பதற்கும் ஆக்கப்பூர்வமான பணிகளை துறையின் மூலம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து முதல்வரின் ஆலோசனைப்படி செயல்படுத்தி வருகிறோம். ஏற்கனவே 5 தினங்களுக்கு முன்னர் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். அதில் அரசு சார்பில் தக்காளியை கூடுதலாக கொள்முதல் செய்து 62 பண்னை பசுமை கடைகள் மூலம் அதன் மூலம் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

சில்லறை வியாபாரிகள் வெளிச்சந்தைகளில் 10 முதல் 20 ரூபாய் வரை சற்று கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர். மொத்த வியாபாரிகளிடமும் விலையை கட்டுப்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். மொத்த வியபாரிகள் தரப்பில் இன்னும் 10 நாட்களில் இந்த விலையேற்றம் இருக்கும் எனத் தெரிவித்தனர். தக்காளி விலையேற்றம் தமிழகத்தில் மட்டும் இல்லை. தக்காளி விலையேற்றம் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்தும், அதனை நிறைவேற்றுவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முதல் கட்டமாக வட சென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னையில் 25  கடைகளிலும், தென் சென்னையில்  25 கடைகளிலும் ஆக 82 கடைகளில் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. சென்னையில் ஏற்கனவே 27 பண்ணை பசுமை கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது. 2 நகரும் பண்ணை பசுமை வாகன கடை மூலம் விற்பனை செய்யப்படும் ஆக மொத்தம் சென்னையில் நாளை முதல் 111 மையங்களில் தக்காளி விற்பனை செய்யப்படும். தேவைக்கேற்ற வகையில் தக்காளி விற்பனை செய்யப்படும்.  அரசு சார்பில் தக்காளி விற்கும் அனைத்து கடைகளிலும் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இந்த விற்பனை அனைத்து மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் விரிவுபடுத்தப்படும். அதற்கான முயற்சிகள் பற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்