தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.
அதே சமயம் இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரு நிலச்சரிவு சம்பவங்களும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதோடு மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் கோவை மாவட்ட சூலூரில் இருந்து வயநாட்டிற்கு சென்றுள்ளன.
இத்தகைய சூழலில் தான் இந்த நிலச்சரிவில் சிக்கி இரு குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வயநாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவுகள் மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
அப்பகுதியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின் மூலம் அனைவரும் காப்பாற்றப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் தளவாட அல்லது மனிதவள ஆதரவை நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.