உலக சுகாதார நிறுவனம், குரங்கு காய்ச்சல் நோயை சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC - Public Health Emergency of International Concern) அறிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் சுகாதார வசதிகளின் தயார்நிலையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கண்காணிப்பின் நிலை தனிமைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறை குறித்து விவாதித்தார்.
குரங்கு காய்ச்சலைப் பரிசோதிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட மையமாகச் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் மத்திய அரசால் இனம் காணப்பட்டுள்ளது. இருப்பினும், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிகழ்வேதும் இதுவரை மாநிலத்தில் பதிவாகவில்லை. மேலும் கண்காணிப்பு நெறிமுறையை மேம்படுத்தவும், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடத்தவும் மருத்துவத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். நோய் பரவல் குறித்துக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.
அதோடு தமிழக மருத்துவத் துறையும், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி இந்நோய் குறித்துத் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தேசிய சுகாதார நலக்குழுமத்தின் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அரவிந்த், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பிற உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.