திமுகவின் முகவரியே நில அபகரிப்பு தான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இ-பாஸ் நடைமுறைக்கு வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''ஒரே நேரத்தில் எல்லாரும் ஒரே இடத்திற்கு போகும் பொழுது அதை முறைப்படுத்த வேண்டியது அவசியம். நீதிமன்றத்தின் கவனத்திற்கு அது சென்றதால் நீதியரசர்கள் முறைப்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்கள். அதனால் அவற்றை ரெகுலேட் செய்து கொள்ளலாம். இதில் தவறு ஒன்றும் இல்லை. நம்மை நாமே வரையறுத்துக் கொள்வதும்; நம்மை நாமே முறைப்படுத்திக் கொள்வதும் நமக்கான பாதுகாப்பு தான். இ-பாஸ் முறையை அரசு முறையாக கையாள வேண்டும். அதை முறையாக செய்வார்களா என்பதுதான் கேள்வி.
ஏன் அங்கே இருப்பவர்கள் எல்லாம் போராட்டம் செய்கிறார்கள் என்றால் அரசு மீது நம்பிக்கை இல்லை. சிஸ்டம் கரெக்ட் ஆனால் அதனைச் செயல்படுத்தும் விதத்தில் பல குறைபாடுகள் இருக்கும் என அச்சம் தெரிவிக்கிறார்கள். அந்த அச்சத்தை போக்கும் வகையில் நியாயமாக, நேர்மையான முறையில் வெளிப்படைத் தன்மையோடு இதை செய்தால் மக்கள் நம்புவார்கள்.
நில அபகரிப்பு என்பது திமுகவின் முகவரியாகவே இருக்கும். திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் நில அபகரிப்பு என்ற செய்திகள்தான் வரும். இதனால்தான் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் நில அபகரிப்புக்கு என்று தனிப் பிரிவையே காவல்துறையில் ஏற்படுத்தி பல வழக்குகளை பதிவு செய்து பல பேரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து இழந்த நிலத்தை மீண்டும் இழந்தவர்களுக்கு திருப்பி கொடுத்தார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி மலருகின்ற பொழுது இழந்த சொத்துக்கள், நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை அதிமுக எடுக்கும்'' என்றார்.