தமிழகம் முழவதும் பண்டைய தமிழர்களின் வரலாறு பண்பாடுகளை பறைசாற்றும் விதமாக கல்வெட்டுகள், தாழிகள், சிற்பங்கள், ஓவியங்கள் என்று பல்வேறு சான்றுகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தாலும் ஏராளம் மறைந்து கிடக்கிறது. அப்படி மறைந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் ஆர்வமாக உள்ளது. ஆனால் அதற்காக அரசுகள் ஒன்றும் செய்வதாக தெரியவில்லை.
இந்த நிலையில்தான், தஞ்சை மாவட்டம், பேராவூரணி தாலுகா கட்டயன்காடு கிராமத்தில் உள்ள அய்யனார்கோயில் குளம் தூர்வாரும் பணிகள் கடந்த 10 நாட்களாக நடந்து வரும் நிலையில் குளம் ஆழப்படுத்த பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்ட, தோண்ட ஆங்காங்கே முதுமக்கள் தாழிகள் தென்படத் தொடங்கியது. இந்த தாழிகளை ஆய்வு செய்ய வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஏ.பி.ஜெ.அப்துல்காலம் கிராம வளர்ச்சிக்குழு மூலம் நெல்லை சார் ஆட்சியர் சிவகுருபிரபாகரன் ஐ.ஏ.எஸ். தமிழக தொல்லியில் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.க்கு கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை மனுவுக்கு உடனடி நடவடிக்கையாக தஞ்சை தமிழ்பல்கலைக் கழக ஆய்வு மாணவர் கார்த்திகேயன் மேலாய்வு செய்து அறிக்கை கொடுத்ததால் பல்கலைக் கழக ஆய்வாளர் பேராசிரியர் செல்வக்குமார் வந்து ஆய்வுசெய்து 2500 ஆண்டுகள் பழமையான தாழிகள் காணப்படுகிறது. இதற்கு மேல் முழுமையான அனுமதி கிடைத்தால் மட்டமே அகழாய்வு செய்ய முடியும் என்று கூறிச் சென்றார்.
அகழாய்வு செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என்று மீண்டும் முதலமைச்சர் முதல் தொல்லியல்துறை வரை கோரிக்கை மனு அனுப்பிவிட்டு தாழிகள் இருந்த இடங்களை வட்டமிட்டு பாதுகாக்க வேண்டும் என்று அடையாளமிட்டு கவனித்து வந்தனர் இளைஞர்கள். ஆனால் குளம் தூர்வாரும் ஒப்பந்தக்கார்களோ அந்த தாழிகளின் வரலாறும், சிறப்பும் தெரியாமல் தினசரி ஒன்று இரண்டாக உடைத்து மண் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பாதுகாக்கப்பட வேண்டிய தாழிகள் அத்தனையும் உடைந்து நாசமாகிக் கொண்டிருக்கிறது.
இன்று ஒரு இடத்தில் பொக்லின் தோண்டும் போது தாழி உடைந்து அதற்குள் இருந்த சிறிய குடுவைகள், கிண்ணங்கள் போன்ற பல மண் பாத்திரங்கள் உடைந்து சிதைக்கப்பட்ட நிலையில் வெளிப்பட்டுள்ளது. அவற்றை அந்த கிராம இளைஞர்கள் சேகரித்து வைத்துக் கொண்டு, மற்ற தாழிகளையும் உடைத்து சிதைத்து தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் முன்பு அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் வடிக்கின்றனர்.
இதற்கு முதல்கட்டமாக ஊராட்சி நிர்வாகம் முதல் மாவட்ட நிர்வாகம் வரை தலையிட்டு தாழிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு அரசு அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எல்லாம் விரைந்து நடக்கவில்லை என்றால் அத்தனையும் அழிக்கப்பட்டுவிடும் என்கிறார்கள்.