மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி என இரு பிரிவினருக்கு இடையே கடந்த மே மாதம் முதல் ஓயாத கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல இடங்களில் இதற்குக் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம், தொடர்ந்து மூன்று முறை மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில், மணிப்பூரில் வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வன்முறையால் பாதிக்கப்பட்டதால் தனது குடும்பத்துடன் தமிழகம் வந்துள்ளார். மேலும் அவர், தங்களுக்கு உதவ அரசு முன்வரவேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று அங்குள்ள முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்திருந்தார். மணிப்பூரில் இருந்து தப்பி வந்து, என்ன செய்வதெனத் தெரியாமல் 2 நாட்களாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த இவர்களுக்கு, அவ்வழியே சென்ற செங்குன்றத்தைச் சேர்ந்த மூர்த்தி (61) என்பவர் உதவியுள்ளார். மேலும், 9 பேருக்கும் தனது வீட்டில் உணவு, உடை கொடுத்து, தங்குவதற்குத் தற்காலிகமாக ஓர் வீட்டையும் கொடுத்துள்ளார்.
இதனிடையே முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு கொடுத்த ஜோசப்பை, “ஆட்சியரை உடனடியாகச் சென்று பாருங்கள். அவர் உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வார்” என முதலமைச்சர் தனிப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மணிப்பூரில் இருந்து வந்த ஜோசப் குடும்பத்தினருக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், கல்வித் தகுதி விவரங்களைச் சேகரித்து தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்தார். அடைக்கலம் கொடுத்த முன்னாள் இராணுவ வீரர் மூர்த்தியை அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் செங்குன்றம் பகுதி வருவாய்த் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, ஜோசப் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கும், சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அதிகாரிகளுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர் ஜோசப் குடும்பத்தினர்.