தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான தங்கமணி, "தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க.விற்கு அமோக ஆதரவு உள்ளது. மக்கள் ஆதரவுடன் மறுபடியும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார். மின் உற்பத்தி அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்காமல் இருக்க முடியாது. வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கித்தான் தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்படி அராஜகம் நடைபெறும் என்பதற்கு செந்தில் பாலாஜியின் பேச்சு ஒரு உதாரணம்" என்றார்.