திருவாருரில் மனிதநேய மக்கள் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதனமுறையில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி உயர்த்தி வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. மேலும் சரக்கு கட்டணம் உயர்ந்து, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் ஏழை எளிய மற்றும் நடுதர பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆட்படுகின்றனர்.

டீசல், பெட்ரோல் விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து தினசரி போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் பேருந்து நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெட்ரோல் டீசல் விலை பாதிப்பை உணர்த்தும் வகையில் ஆட்டோவை கயிறு கட்டி திருவாரூர் பேருந்து நிலையத்தை சுற்றி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.