தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்காக, தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வருகிறார். இந்நிலையில் அரியலூர், காடரத்திதம் என்ற கிராமத்தில் இருந்து, திருமானுர் என்ற ஊருக்கு உதயநிதி ஸ்டாலின் சென்ற வாகனத்தை, த.மா.கா கட்சியினர் வழிமறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூரில் ஜி.கே.மூப்பனாரின் அரங்கத்தில் உதயநிதி பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த அரங்கத்தின் முகப்பில் உள்ள 'மூப்பனார் அரங்கம்' என்ற பெயரை அழித்து, அதன்பின்னர் பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்து, த.மா.கா வினர் உதயநிதி ஸ்டாலினின் காரை மறித்துக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து த.மா.கா இளைஞர் அணித்தலைவர் யுவராஜா கூறுகையில், தமிழகத்தின் நன்மைக்குப் பாடுபட்ட மூத்த தலைவர்களின் ஒருவர் மூப்பனார். அவரது பெயரை அழித்துவிட்டு பரப்புரை செய்யவேண்டிய தேவை என்ன இருக்கிறது. தற்காலிகமாகப் பெயரை அழித்திருந்தால் கூட பரவாயில்லை. பெயிண்ட் கொண்டு நிரந்தமாக அழித்தது ஏன்? இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
அரியலூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் சிவசங்கர் இதுகுறித்து கூறுகையில், அந்த மேடை அரசுக்கு சொந்தமான மேடை. நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டு ஜி.கே.மூப்பனார் அரங்க மேடை என்று இருந்தது. அந்த மேடை ஊராட்சி அலுவலர்களால் சீரமைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாகச் சீரமைக்கப்படாமல் இருந்து, தற்பொழுது தான் சீரமைத்துள்ளார்கள். அப்பொழுது ஊராட்சி நிர்வாகம் என்ன செய்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. வண்ணப் பூச்சி செய்துள்ளனர். பெயரை எழுதுவதற்கான சந்தர்ப்பம் இருந்திருக்கலாம்.
இதுகுறித்து விசாரிக்கச் சொல்லியுள்ளேன். நாங்களே உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அந்த முயற்சியை செய்கிறோம். மறைந்த மூப்பனார் மீது கலைஞர் மிகவும் நட்பு கொண்டவர். அதேபோல் அவர் மீதும் எங்களுக்கு மரியாதை இருக்கிறது. இதில் திட்டமிட்ட செயல் எதுவுமே இல்லை. இதை திமுக செய்யவில்லை என்பதை உறுதியாக குறிப்பிடுகிறேன் என்றார்.