சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட டிடிவி தினகரனின் மைத்துனர் எஸ்.ஆர்.பாஸ்கரன் மற்றும் சகோதரி ஸ்ரீதளதேவி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதளதேவி. இவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன் சென்னை ரிசர்வ் வங்கியின் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பாஸ்கரனும், மனைவி ஸ்ரீதளதேவி வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிபிஐ, 1997ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 20 லட்சம் அபராதமும் , பாஸ்கரனின் மனைவி ஸ்ரீதளதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 2008 ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், சிபிஐ. நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து சி பி ஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையாததால், தினகரன் மைத்துனர் பாஸ்கரனுக்கும், தினகரனின் சகோதரிக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத் உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி இருவரும் தொடர்ந்த வழக்கில் மார்ச் 5-ம் தேதிக்குள் இருவரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து இருவரும் இன்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன்பு சரணடைந்தனர். மேலும் சிறையில் முதல் வகுப்பு கோரி இருவரும் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, சிறையில் முதல் வகுப்பு கோரி அவர்கள் தொடர்ந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டார்.