தமிழகத்தின் நலன், நாட்டின் நலனுக்காகவே அதிமுக கூட்டணியில் தமாகா இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தாலும், அவர்களுக்கும் சிறுபான்மை மக்களுக்குமிடையே ஒருபாலமாக தமாகா விளங்கும். பாஜகவினர் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டால், அதனைத் தட்டிக்கேட்கவும் தமாகா தயங்காது." என்று இன்று ஈரோட்டில் நம்மிடம் பேசிய த.மா.க. பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகர் தொடர்ந்து பேசும் போது,
"காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என திமுக - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி கொடுத்துள்ளது. ஆனால், இவர்களது கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதுதான், விவசாயிகளைப் பாதிக்கும் வகையில், டெல்டா மாவட்டத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டது. விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டமும், திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோதுதான் கொண்டு வரப்பட்டது.
ஈரோடு மாவட்ட விவசாயிகள் பாதிப்படையும் வகையில் கெயில் குழாய் பதிப்பு திட்டத்தையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசுதான் கொண்டு வந்தது. இத்திட்டத்தை எதிர்த்து போராடிய ம.தி.மு.க. கணேசமூர்த்திதான், இப்போது தி.மு.க. கூட்டணியின் ஈரோடு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மணிமாறன் வெற்றி பெற தமாகா முழு மூச்சுடன் பாடுபடும்.
தமிழகத்தில் கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்களிடம் ரூ 100 முதல் ரூ 350 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஏழை,எளிய மக்களுக்கு இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அதிமுக வழங்க வேண்டும். , விவசாயிகளின் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும் அளிக்க வேண்டுமென அதிமுகவை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்" என விடியல் சேகர் கூறினார்.