கோவையில் டிடிவி தினகரன் அணி நிர்வாகிகள்
கூட்டத்திற்கு விடுதி அரங்கு தர மறுப்பு!
கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற இருந்த கோவை மாவட்ட டிடிவி தினகரன் அணியினரின் (அதிமுக அம்மா அணி) நிர்வாகிகள் கூட்டத்திற்கு விடுதி அரங்கு இல்லை என கூறியதால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தினகரன் ஆதரவாளர்கள் விடுதி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில், மாவட்ட அளவிலான டிடிவி தினகரன் (அதிமுக அம்மா அணி) சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. அதற்காக காந்திபுரம் பகுதியிலுள்ள அரசு ஹோட்டலான தமிழ்நாடு ஹோட்டலில் அரங்கம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை நிர்வாகிகள் வரத்தொடங்கியதும் பதிவு செய்யப்பட்ட அரங்கை ஹோட்டல் நிர்வாகம் தர மறுத்தது.
இதனால் அம்மா அணியினர் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவு செய்யப்பட்ட அரங்கில் மின்சார பிரச்சனை இருப்பதால் அனுமதிக்கவில்லை என ஹோட்டல் தரப்பு விளக்கம் கொடுத்தனர். ஆனால், யாரோ சிலரது நிர்பந்ததின் காரணமாகவே கூட்டத்தை நடத்தவிடாமல் ஹோட்டல் நிர்வாகம் தடுப்பதாக தினகரன் அணியினர் குற்றம் சாட்டினர். பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை வீட்டில் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தத்தையடுத்து ஹோட்டலில் இருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
- அருள்குமார்