கரோனா பரவலைத் தடுக்க, பணிகளை மேற்பார்வை செய்ய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்துக்கு என நியமனம் செய்யப்பட்ட முதன்மைச் செயலாளர்களில் ஒருவரும், வேளாண்மை துறைச் செயலாளருமான தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ்., ஜீன் 24ஆம் தேதி வருகை தந்தார். ஜீன் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீரஜ்குமார், இந்த மாவட்டத்தில் அனைத்து விதமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனை இன்னும் தீவிரமாக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்துக்குள் உள்ள கரோனா நோயளிகளிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுவதை எப்படித் தடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் அதிகமான பரிசோதனைகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அடுத்த ஒரு மாதத்துக்குப் பிறகு இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஒரு கன்ட்ரோல் ரூம் உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. சிறப்பாக நடவடிக்கை எடுக்கிறார்கள். மாவட்டத்தில் கரோனா நிலையைக் கண்காணித்து வருகிறோம். இங்கு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இப்போதுவரை இல்லை என்றார்.