சென்னையில் வண்ணாரப்பேட்டையை தொடர்ந்து மண்ணடியிலும் குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிராக காத்திருப்பு தொடர் போராட்டம் தொடங்கியிருக்கிறது. 5- வது நாளாக கூடியிருக்கும் மக்களிடையே நேற்று (18/02/2020) இரவு 11.00 மணியளவில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி பேசுகையில்,
"அமைதியாக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் உணர்வுகளை அதிகார வர்க்கம் மதிக்க வேண்டும். வண்ணாரப்பேட்டையில் காவல்துறை தான் முதலில் வரம்பு மீறியது. அதன் விளைவாக இன்று தமிழகமெங்கும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் பரவியிருக்கிறது.
மக்களை அதிகார ஆணவத்தில் ஒடுக்கலாம் என நினைத்தீர்கள். அதன் பிறகு தான் போராட்டம் வலிமைப் பெற்றிருக்கிறது. இது உரிமைகளுக்கான போராட்டம். துப்பாக்கிகளைக் கண்டு மக்கள் பயப்பட மாட்டார்கள். இன்று அதே காவல்துறை ஒரு ஒரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவலர்கள் சுதந்திரமாக "வாட்ஸ் அப்" பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து சீராக போய்க் கொண்டிருக்கிறது. வணிகர்களுக்குப் பாதிப்பில்லை.
அந்த அளவுக்கு யாருக்கும் தொந்தரவு இல்லாமல் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே மக்கள் வெயிலில், பனியில் போராடுகிறார்கள். பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் கூடியிருக்கிறார்கள். யாராவது இங்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தால் இப்பகுதி இன்ஸ்பெக்டர் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை இப்போதே சொல்லிக் கொள்கிறோம்.
இந்த சட்டங்கள் மக்கள் விரோதமானவை. சட்டசபையில் நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்தோம். அதை விவாதிக்காமலேயே சபாநாயகர் நிராகரித்து விட்டார்.
எனவே நாங்கள் மக்கள் மன்றத்தில் நிற்கிறோம். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிடுவோம் என அறிவித்தோம். நீதிமன்றத்தை வைத்து விளையாடியுள்ளார்கள். தடை என்றார்கள். அந்த தடை எங்களுக்கு பொருந்தாது. எனவே திட்டமிட்டப்படி காலை 10.00 மணிக்கு கலைவாணர் அரங்கம் அருகிலிருந்து தேசிய கொடிகள் ஏந்தி சட்டசபை நோக்கி எங்கள் அமைதி பேரணி புறப்படும். அதில் மாற்றமில்லை." இவ்வாறு பேசினார்.