விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்திற்கான மூலப் பொருட்களை விற்றவர் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை கண்டறிந்து அதனை அழிக்கும் பணியிலும் கள்ளச்சாராயத்தை விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகிலுள்ள வடுகசாத்து கிராமத்தில் போலீசார் நேற்று கள்ளச் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு மீனா என்ற பெண்மணி அவரின் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. மேலும் அவரின் வீட்டிற்கு அருகே போலீசார் சென்றபோது மீனாவின் வீட்டில் இருந்து சாராய வாடை வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து போலீசார் மீனாவின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியபோது சமையல் அறையில் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான கேஸ் அடுப்பில் மீனா சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களை வைத்து சாராயம் காய்ச்சும் மீனாவின் செயலைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் வீட்டிற்குள் நுழைந்ததைக் கண்ட மீனா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை மடக்கிப் பிடித்த போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் மீனாவின் வீட்டில் இருந்து கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக கேஸ் அடுப்பு, சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பாத்திரம் மற்றும் வீட்டில் இருந்த 100 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டில் இருந்து போலீசார் கைது செய்து காவல் நிலையில் அழைத்து செல்ல முயன்றபோது தன்னை விட்டுவிடும்படி மீனா போலீசாரிடம் கெஞ்சினார். இருப்பினும் போலீசார், மீனாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். வீட்டிலேயே சாராயம் தயாரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.