திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள ஆவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான மாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவருகிறார். இவர் தனது வேலைக்காக ரயிலில் செல்லும்போது அதே ரயிலில் வேலைக்குச் சென்ற பெரியபாளையம் அருகே ஆரணியை அடுத்த காரணி பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் கவுதமன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது கவுதமன் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை அடையாறில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் கவுதமன் - மாலினி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
2021இல் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தேனாம்பேட்டையிலிருந்து ஆவூர் கிராமத்திற்குச் சென்றுள்ளனர். இதையடுத்து, கடந்த மாதம் 17ஆம் தேதி காலை ஆறு மணிக்கு கவுதமனுக்கு ஃபோன் வந்தது. அதில், தாத்தா இறந்துவிட்டதாக தகவல் வந்தது. தாத்தாவின் இறப்பிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடுவதற்காக மாலினியும் அவரது தம்பியும் கவுதமனின் ஊருக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு கவுதமனின் ஃபோட்டோவுடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்ட இருவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாலினி, தனது கணவர் சாவில் மர்மம் உள்ளது. அவரது பெற்றோர்கள் அவரை ஆணவக் கொலை செய்துவிட்டார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணீஸ்வரி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடைபெற்றுவந்தது. அதில், தாத்தாவின் சாவுக்குச் சென்ற கவுதமன், பெற்றோரிடம் தனக்கு கடன் உள்ளதாகவும், அதை அடைக்க உதவ வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதைக் கேட்ட பெற்றோர்கள் கவுதமனை திட்டியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த கவுதமன், தந்தை வீட்டின் மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கவுதமன் இறந்ததை, அவரது பெற்றோர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கவில்லை. அவரது மனைவிக்கும் தெரிவிக்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, கவுதமனை தற்கொலை செய்துகொள்ள தூண்டியதாக அவரது தந்தை அண்ணாமலை (67), அவரது அண்ணன் சீனிவாசன் (33) ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.