
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராமில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூபாய் 235 கோடி மதிப்பில் 10 ஏக்கரில் 5.57 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 21 அடுக்குமாடி கட்டடமாக ஐ.டி பூங்கா அமையவுள்ளது. தென்சென்னையில் உருவாக்கிய வளர்ச்சியைப் போல வடசென்னையிலும் உருவாக்க ஐ.டி. தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட13 மாவட்டங்களில் ரூபாய் 235.20 கோடியில் கட்டப்பட்ட 16 துணை மின் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்தார். மேலும் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1,000 குடியிருப்பு கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு பையனூரில் 6,000 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.