காவல்துறை என்றாலே பொதுமக்களுக்கு ஒருவிதமான அச்சம் இன்றளவும் இருந்து வருகிறது. இன்னும் சிலர் புகார் கொடுப்பதற்கே அச்சப்படும் நிலையிலும் இருந்து வருகின்றனர். ஆனால் இதற்கு எல்லாவற்றிற்கும் மாறாக, திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை திகழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் நபர்களிடம் ஆய்வாளர் ஏழுமலையின் அணுகுமுறை காவல்துறையின் உங்கள் நண்பன் என்பதைப் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு 70 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான மூதாட்டி ஒருவர் திருத்தணி காவல்நிலையத்தில் ஆதரவின்றி தவிக்கும் என்னை பலர் தாக்க வருவதாகப் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட ஆய்வாளர் ஏழுமலை, இனி நீங்கள் யாரும் இல்லாத ஆதரவற்ற மூதாட்டி அல்ல. நீங்கள் எனது தாய் போன்றவர். ஆகவே இன்று முதல் உங்கள் மகனாக நான் நின்று உங்களுக்கு மாதம்தோறும் பராமரிப்புத் தொகையைத் தருகிறேன் என்று கூறி அவருக்கு இன்றுவரை மாதம்தோறும் ரூ. 1000 அளித்து வருகிறார்.
இதனிடையே கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்கள் விற்கும் நபர்களை அழைத்து போதைப்பொருள் விற்பனையை நிறுத்தவும், அதற்கு மாற்று வாழ்வாதாரமாக தானே காய்கறி கடையை வைத்துத் தருவதாகவும் கூறி ஆய்வாளர் ஏழுமலை போதைப் பொருட்கள் ஒழிப்பு பிரச்சாரத்தையும் தொடங்கியிருக்கிறார். இப்படி ஆய்வாளர் ஏழுமலையின் செயல்பாடுகளுக்குத் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷின் ஒத்துழைப்பும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.