அவிநாசி ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் கண்டெய்னர் லாரி மோதிக்கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசு பேருந்தும், டைல்ஸ் லோடு ஏற்றி சென்ற லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்ததில் எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்து நிகழ்ந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.