திருப்பூர் மாவட்டம், பாப்பம்பாளையத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தருவதாகக் கூறி, பண மோசடி செய்த முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கு எதிரான வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015- ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், சர்கார் காத்தகன்னி கிராமத்தில், குடிநீர் இணைப்பு தருவதாகக் கூறி, அப்போதைய பஞ்சாயத்து தலைவர் சந்திரன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர் சோமசுந்தரம் ஆகியோர், கிராமத்தில் உள்ள சுமார் 400 வீடுகளில் தலா ஐயாயிரம் ரூபாய் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். ஆனால், இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படாததையடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கிராம மக்களிடம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்திரன் மற்றும் ஊழியர் சோமசுந்தரம் ஆகியோர், தாங்கள் வசூலித்த பணத்திற்கு ரசீது கூட வழங்காமல் ஏமாற்றியதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜ் புகார் தெரிவித்தார்.
மேலும், குடிநீர் இணைப்புக்காக ஏற்கனவே பணம் செலுத்திவிட்ட நிலையில், தற்போது மீண்டும் பணம் செலுத்தினால்தான் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என தற்போதைய பஞ்சாயத்து தலைவர் தெரிவிப்பதாகவும், கிராம மக்களிடம் பண மோசடி செய்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊழியர் மீதுதிருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக டிசம்பர் 27- ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.