சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் விராட்டிகுப்பம் எனும் பகுதி உள்ளது. இப்பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில், நேற்று காலை சாலையோரம் ஒரு இருசக்கர வாகனம் நீண்ட நேரம் நிற்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின்படி, டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் அந்த இருசக்கர வாகனம் நின்ற இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
வாகனம் நின்ற இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்தனர்.
அவர்கள் அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டதில், உடல் கிடந்த இடத்தின் அருகில் சிதைந்த செல்போன், ஒரு பர்ஸ் ஆகியவை கிடந்துள்ளன. அதில் ஆதார் உள்ளிட்ட சில அடையாளங்கள் இருந்துள்ளன. அதன் மூலம் எரிக்கப்பட்ட வாலிபர் திருநெல்வேலி மாவட்டம், சோலைசேரியை சேர்ந்த ஆபிரகாம் சாலமன் ராஜா என்பவரின் மகன் பெஞ்சமின் ஆபிரகாம்(28) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு போலீசார் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
அதன்பிறகு போலீஸார் நடத்திய விசாரணையில், பெஞ்சமின் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்ததுள்ளார். அங்கிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போதுதான் விழுப்புரம் நெடுஞ்சாலை அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
அவரது சடலத்தை மீட்ட போலீசார், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டது எப்படி? அவருக்கு யாராவது விரோதிகள் இருக்கிறார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.