வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களின் மூலமாக கரோனா தொற்று பரவிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திரா, கர்னாடகா, கேரளா போன்ற மாநிலங்களின் தமிழக எல்லைப் புறங்கள் சீல்வைக்கப்பட்டு கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டது. மாநிலத்திற்குத் தேவையான அத்தியாவசிய உயிர்காக்கும் பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
தமிழக கேரளாவின் தென்காசி மாவட்டத்தின் புளியரை பார்டர் பகுதி பரபரப்பாக காணப்படும். தற்போது அந்தப் பகுதிகள் போலீஸ் மற்றும் சுகாதாரத் துறையினரின் வசம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து டூவீலர்களில் வருபவர்கள் செல்ல அனுமதி இல்லை. தனியார் வாகனங்களுக்கும் அதே கட்டுப்பாடுதான். அத்யாவசிய காரணமென்றால் அவைகள் உறுதி செய்யப்பட்டு, வாகனத்தில் வந்தவர்கள் தெர்மல் ஸ்கேனருக்கு உட்படுத்தப்பட்டு உடலின் சூடு நார்மலாக இருந்தால் அனுமதிக்கப்படுகின்றனர். அது தாண்டினால் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இது போன்று கேரளாவிலிருந்து வந்த பல வாகனங்கள் எல்லையிலேயே முடக்கப்பட்டுள்ளன. இதில் வருவாய்த்துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

நேற்று மாலை கேரளாவிலிருந்து ஆம்புலன்சில் பெண் உட்பட மூன்று பேர் வந்தனர். அவர்களில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. துபாயிலிருந்து வந்த அந்த வாலிபரை, சுகாதாரத் துறையினர் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்ததில் காய்ச்சலின் அளவு அதிகமிருந்தால் அவர்கள் ஆம்புலன்சுடன் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அண்மை நாட்களாக நோய் தடுப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்கள் சொல்லும் காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், நோய் தொற்று இல்லாத நிலையில் பரிசோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
கடையநல்லூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் துபாயிலிருந்து திருவனந்தபுரம் வழியாக வந்தவரை, இங்கே வருவதற்கு ஆம்புலன்சில் ஏற்றி வந்துள்ளனர். அவரைச் சோதனை செய்ததில் காய்ச்சல் கண்டிருப்பது தெரியவர அவர்களை வாகனத்தோடு திருப்பி அனுப்பி, கேரளாவி்ல் அவர்களை வைத்து தனிமைப்படுத்தி சிகிச்சையை முடித்து, அதன் பின்னர் நடத்தப்படும் சோதனையில் நெகட்டிவ் என்று தெரிய வந்தால் மட்டுமே இங்கே அனுமதிக்கப்படுவார் என்றார் பார்டரின் சுகாதாரத் துறையின் அதிகாரி ஒருவர்.
ஆரம்ப கட்டத்தில் காய்ச்சல் காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் எல்லையைக் கடக்க முயன்று தடுக்கப்பட்ட முதல் பரபரப்புச் சம்பவம் இது.