திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடைபெற்றது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாநாட்டில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தெற்கில் விடியல் பிறந்தது போல இந்தியா முழுமைக்கும் விரைவில் விடியல் பிறக்கும். ஒரு காலத்தில் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான் பிரதமர் மோடி. ஆனால், தற்போது மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டவற்றுக்கும் மத்திய பாஜக அரசு சட்டம் இயற்றி வருகிறது. எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை.
மத்திய அரசுக்கு பணம் தரும் ஏடிஎம் இயந்திரமாக மாநிலங்களை மாற்றிவிட்டனர். மிகப்பெரிய இயற்கைப் பேரிடருக்கு நிவாரணமாக 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். பிரதமர் வந்தார், தருவேன்னு சொன்னார். மத்திய நிதியமைச்சர் வந்தார், தருவேன்னு சொன்னார். பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்தார். தருவேன்னு சொன்னார். ஆனால் யாரும் இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை.
திருக்குறளைச் சொன்னால் போதும், பொங்கலைக் கொண்டாடினால் போதும், அயோத்தியில் கோயிலைக் கட்டினால் போதும், தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள் என நினைக்கிறார்கள். அவர்கள் இன்னும் நம்மைப் புரிந்துகொள்ளவில்லை. இது பெரியார் மண், அண்ணாவின் மண், கலைஞரின் மண். கடந்த 2 முறையைப் போல, இந்த முறையும் தமிழ்நாட்டு மக்கள் மோடிக்கு வாக்களிக்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.