டிக் டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப்பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும், ஆகவே அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மதுரையைசேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
![t](http://image.nakkheeran.in/cdn/farfuture/kcljgCxi4uBhGfdV10AfVJDZipV6cm24WEerHUhHm4M/1555918425/sites/default/files/inline-images/tic%20tac.jpg)
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ஏற்று, சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவை அடுத்து டிக் டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நோட்டீஸ் வழங்காமல் செயலி தடை செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் புகார் கூறியது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் ஏப்ரல் 24ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் தவறினால் தடை உத்தரவு நீக்கப்பட்டதாக கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.