அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாகத் தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இரவு நேரங்களில் திடீர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் மிதமான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மிக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசா மற்றும் சட்டீஷ்கரை நோக்கி நகர உள்ளது. அதேநேரம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஏற்கனவே பல இடங்களில் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.