நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்தத் தேர்தலில், தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும், பாஜக கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் களத்தில் உள்ளனர். டி.டி.வி. தினகரனும், தற்போது திமுகவில் உள்ள தங்க தமிழ்செல்வனும் ஒரே கட்சியில் பயணித்த முன்னாள் நண்பர்கள் என்பதால் தேனி தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்த களமாக உள்ளது. இந்நிலையில், தேனியில் நடைபெற்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தேனி நாடாளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில், “மூன்று முறை தோற்றதற்கு வஞ்சம் தீர்க்க வேண்டும் என்றால் தயவு செய்து உழைச்சு அதிகமான ஓட்டை வாங்குங்க. உழைத்தால் கட்சியில் இருங்க இல்லை என்றால் வெளியே போய்விடுங்க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்காமல் இருந்திருந்தால் அமைச்சராக கூட ஆகியிருக்கலாம். மூன்று ஆண்டுகள் வெட்டியாய் போய்விட்டது'' என ஆதங்கமாகப் பேசினார்.