
மனிதகுலத்தை வாழவைக்கும் மழை, பெய்தும் கெடுக்கும் என்பது காளீஸ்வரன் – இலங்கேஸ்வரி தம்பதியின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், வத்றாப் தாலுகா, காடனேரியில் மிகவும் ஏழ்மை நிலையில் மண் வீட்டில் குடியிருக்கின்றனர் காளீஸ்வரன் – இலங்கேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் முத்தீஸ்வரி எனும் பெண் குழந்தையும், ஒரு கைக்குழந்தையும் உள்ளனர்.
நேற்றிரவு (05.12.2021) பெய்த கனமழையில், காளீஸ்வரனின் மண் வீடு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. அப்போது காளீஸ்வரன், இலங்கேஸ்வரி, முத்தீஸ்வரி மற்றும் கைக்குழந்தை ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். மண் சுவர் சரிந்து விழுந்ததில் முத்தீஸ்வரி படுகாயமுற்றாள். வத்றாப் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த முத்தீஸ்வரி, இன்று காலை இறந்துபோனாள். காளீஸ்வரன் குடும்பத்துக்கு அரசுத் தரப்பில் வீடும், நிவாரணமும் தர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.