இந்தியாவில் கொரோனா வைரஸால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 34 ஆக இருந்த நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
![Corona Laboratory in Theni](http://image.nakkheeran.in/cdn/farfuture/6xR1HV0Risi4ELmG5OXut6emedz2haYNjYDRT72sKWU/1583682039/sites/default/files/inline-images/SASA.jpg)
இந்நிலையில் ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதேபோல் ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூன்று பேர் உடல்நிலையும் தற்பொழுது வரை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில், கொரோனா உறுதியானதை அடுத்து ஓமனில் இருந்து இந்தியா வந்த 45 வயதுடைய அந்த நபருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகிறோம். கோரோனோ பாதிப்பு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். கொரோனவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத் துறை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேனியில் கொரோனா பரிசோதனை கூடம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிண்டியில் கிங் ஆய்வகம் அமைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது கூடுதலாக தேனியில் கொரோனா சோதனை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.