சேலம் அருகே, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட மூன்று பேர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அதே மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சேலத்தை அடுத்த, திருமலைகிரி அருகே உள்ள பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். வெள்ளி பட்டறை அதிபர். இவரிடம் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஆகாஷ் (29), அவருடைய மனைவி வந்தனா குமாரி (25) ஆகியோர் தங்கராஜின் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு ஆறு மாதத்தில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. தங்கராஜின் வெள்ளிப்பட்டறைக்கு அருகே அவருக்குச் சொந்தமான தோட்டத்தில், தன்னிடம் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தங்கும் அறைகள் கட்டிக்கொடுத்துள்ளார். அதில் ஒரு வீட்டில் ஆகாஷ்&வந்தனா குமாரி தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களூடன் ஆகாஷின் சித்தப்பா மகன் சன்னி குமார் (15) என்ற சிறுவனும் தங்கியிருந்தார். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்ள வசதியாக ஊரில் இருந்து சன்னிகுமாரை அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அன்று வெள்ளிப்பட்டறைக்கு விடுமுறை என்பதால் ஆகாஷூம், வந்தனா குமாரியும் வீட்டில் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே தொட்டிலில் அவர்களுடைய குழந்தை நீண்ட நேரமாக பீறிட்டு அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழு குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். வீட்டுக்குள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தபோது அங்கே வந்தனாகுமாரி கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து இரும்பாலை காவல்நிலையத்திற்கும், சேலம் மாநகர காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வந்தனாவின் வீட்டில் இருந்து சுமார் 300 அடி தூரத்தில் அவருடைய கணவர் ஆகாஷூம், உறவினர் மகன் சன்னிகுமாரும் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
வீடு புகுந்து வந்தனாகுமாரியை கொலை செய்த மர்ம கும்பல்தான், தண்ணீர் எடுத்து வருவதற்காக பிளாஸ்டிக் குடங்களுடன் சென்ற ஆகாஷையும், சன்னிகுமாரையும் தீர்த்துக் கட்டியிருப்பது தெரிய வந்தது.
காவல்துறையினர் விசாரணையில், தங்கராஜின் வெள்ளிப்பட்டறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆக்ராவை சேர்ந்த ஆகாஷ், அவருடைய நண்பர்கள் வினோத், தினேஷ், விஜி, சுராஜ் ஆகியோர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். அப்போது ஆகாஷின் காதலியான வந்தனா குமாரியை அழைத்து வந்து, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இளம்பிள்ளை அருகே உள்ள சித்தர் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு வெள்ளிப்பட்டறைக்கு தன்னுடன் வந்தனாகுமாரியையும் வேலைக்கு அழைத்துச் சென்று வந்தார்.
இதற்கிடையே, கடந்த ஓராண்டுக்கு முன்பு, தங்கராஜின் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்த வடமாநில இளைஞர்கள் வினோத், தினேஷ் உள்பட நான்கு பேரும் சொந்த ஊர் சென்றவர்கள் அதன்பின் வேலைக்கு வரவில்லை. கடந்த 15 நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்றிருந்த ஆகாஷ், மீண்டும் திருமலைகிரிக்கு வந்தபோது உடன் தன் சித்தப்பா மகன் சன்னிகுமாரையும் அழைத்து வந்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, மார்ச் 7ம் தேதியன்று வினோத், தினேஷ், விஜி, சுராஜ் ஆகியோர் சேலம் வந்துள்ளனர். அவர்கள் தங்கராஜிடம் சென்று மீண்டும் வெள்ளிப்பட்டறையில் வேலை கேட்டுள்ளனர். தங்கராஜூம் அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொண்டதோடு, அவர்கள் தங்குவதற்கும் வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
ஏற்கனவே ஆகாஷூக்கும், வினோத்துக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. மார்ச் 8ம் தேதி இரவு வினோத் தன் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். பின்னர் அவர்கள் ஆகாஷிடம் சென்று தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆகாஷையும், அவருடைய உறவினர் சன்னிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆகாஷ் தம்பதியின் குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்ததால் அது மட்டும் உயிர் தப்பியது.
மூவரையும் கொலை செய்த நான்கு பேர் கொண்ட கும்பலை பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் மூன்று தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
கொலையாளிகள் பேருந்து, ரயில்கள் மூலம் தப்பிச்சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சேலம் புதிய பேருந்து நிலையம், சூரமங்கலம் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேடிப்பார்த்தனர். செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு செய்ததில், கொலையாளிகள் கேரள மாநிலம் பாலக்காடு ரயில்நிலையம் பகுதியில் சுற்றித்திரிவது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை காவல்துறையினர், பாலக்காடு விரைந்து சென்று, திங்கள்கிழமை (மார்ச் 9) காலையில், வினோத், தினேஷ், விஜய் ஆகிய மூவரை கைது செய்தனர். மூவரையும் சேலத்திற்கு அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி சுராஜ் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கொல்லப்பட்ட ஆகாஷ் தம்பதியின் ஆண் குழந்தை, வெள்ளிப்பட்டறை அதிபர் தங்கராஜ் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆக்ராவில் வசிக்கும் ஆகாஷ் தம்பதியினரின் உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வந்த பிறகு, சடலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். குழந்தையும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.