கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்த ஆர்.எஸ்.எஸ்.-யை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதிக்கு அருகே உள்ளது நல்லாம்பாளையம் கிராமம். இந்தப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்று வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நல்லாம்பாளையம் பகுதிக்கு மாற்று உடையில் சென்ற போலீசார் லாட்டரி டிக்கெட் விற்பனை குறித்து நோட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நல்லாம்பாளையம் பகுதியில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திர வடிவேல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் விலை உயர்ந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. சந்தேகமடைந்த காவல் ஆய்வாளர் அந்தக் காருக்குள் இருந்த 3 நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினார்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர்கள் சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த சாஜித், தொப்பம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ், சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.
அதன்பிறகு, அந்த காரை சோதனை செய்ததில், இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை திருட்டுத் தனமாக விற்று வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்த 25 கேரள லாட்டரி டிக்கெட்டுகள், 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம், 7 செல்போன்கள் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து 3 பேரையும் காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.