கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க மாநகராட்சி சார்பில் 76,70,318 ரூபாய் (கிட்டத்தட்ட முக்கால் கோடி ரூபாயை தாண்டி) செலவு செய்யப்பட்டதாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தீப்பற்றி எரிந்தது. உடனடியாக மாநகராட்சிக்கு தகவல்போன நிலையில் தீயை அணைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. ஏற்கனவே கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்துவிட்ட நிலையில் துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் 333 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. அப்போது கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏப்ரல் ஆறாம் தேதி பற்றிய தீயை 11 நாட்களாக அணைத்ததற்கான செலவு கணக்கு குறித்து மன்றத்தின் பார்வைக்கு ஒப்புதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்க மொத்த செலவு 76 லட்சத்து 70 ஆயிரத்து 318 ரூபாய் எனக் காட்டப்பட்டுள்ளது. 11 நாட்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கு உணவு, டீ, காபி, குளிர்பானங்கள்,பழங்கள் வாங்கிய செலவு மட்டும் 27 லட்சத்து 51 ஆயிரத்து 678 ரூபாய் என கணக்கு காட்டப்பட்டுள்ளது பகீரை கிளப்பியுள்ளது.