திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுமருதூரில் உள்ள திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கியை வைத்து குருவி, கொக்குகளை வேட்டையாடி வந்துள்ளார். இந்த நாட்டுத் துப்பாக்கியின் அனுமதி காலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிவு பெற்றது. அதற்குப் பின் துப்பாக்கியை புதுப்பிக்காமல் வீட்டிலேயே வைத்துள்ளார். சமயபுரம் கோயில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதான கண்ணன் மற்றும் சமயபுரம் அருகே வி. துறையூரைச் சேர்ந்த 24 வயதான ராகுல் ஆகிய இருவரும், ராஜா வேட்டையாடும் கொக்கு மற்றும் குருவி கறிகளை வாங்கி வந்துள்ளனர். இதனால் இவர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொக்கு கறி வாங்குவதற்காக ராஜாவை சந்திக்க வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கி குறித்து விசாரித்துள்ளனர். அனுமதி காலம் முடிந்துவிட்டதால் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார் ராஜா. இதையடுத்து கண்ணன் ரூ. 7500 பணம் கொடுத்து ராஜாவிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை வாங்கியுள்ளார். நாட்டுத் துப்பாக்கி வேலை செய்யாததாலும், வேட்டையாடுவதற்கு ரவைகள் தேவை என ராஜாவிடம் கேட்டுள்ளனர். அப்போது சமயபுரம் அருகே மருதூரில் உள்ள திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு வருமாறும் அங்கு துப்பாக்கியை பயன்படுத்துவதற்கான ரவைகள் மற்றும் பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பதாகக் கூறி வரவழைத்துள்ளார். அங்கு நாட்டுத் துப்பாக்கியுடன் கண்ணன் மற்றும் ராகுல் நின்றுள்ளனர்.
இந்நிலையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது துப்பாக்கியுடன் நின்ற கண்ணன் மற்றும் ராகுலை பிடித்து விசாரித்துள்ளனர். இந்த துப்பாக்கி ராஜாவிடம் ரூ. 7500 கொடுத்து வாங்கியதாக கூறினர். பின்னர் அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் துப்பாக்கியின் உரிமம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலானதாக தெரியவந்தது. பின்னர் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தடை செய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தாக வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் மூவரையும் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.