சேலம் பெரியார் பல்கலை மாணவி ஒருவர், 40 தைராய்டு மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், சேலம் பெரியார் பல்கலையில் டெக்ஸ்டைல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) காலை, தனது அறையில் மயங்கிக் கிடந்தார். சக மாணவி ஒருவர் அவரை எழுப்ப முயன்றும் அவர் எழுந்திருக்கவில்லை. அருகில் சில மாத்திரைகள் சிதறிக்கிடந்ததால் பதற்றம் அடைந்த மாணவிகள், ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இனிமா கொடுத்து, வயிற்றை சுத்தம் செய்தனர். ஓமலூரில் இருந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை நடந்த சம்பவங்கள் குறித்து பல்கலை நிர்வாகத்திடம் மாணவிகள் கூறாமல் மறைத்துள்ளனர்.
இதுபற்றி தாமதமாகவே பல்கலை பேராசிரியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த மாணவிக்கு தைராய்டு குறைபாடு பிரச்னை இருந்துள்ளது. அதற்காக அவர் தினமும் மாத்திரைகள் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில்தான், மார்ச் 15ம் தேதியன்று, 40 தைராய்டு மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரிய வந்தது.
பேராசிரியர்கள் அவரைக் காணச்சென்றபோது, அந்த மாணவி மருத்துவமனையில் எதுவுமே நடக்காததுபோல் சிரித்துக்கொண்டு படுக்கையில் அமர்ந்து இருந்துள்ளார். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாமா உறவுமுறை கொண்ட இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக பேசியபோது, அவர் செல்போனில் திட்டிவிட்டதாகவும், அதனால் விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த மாணவி கூறியுள்ளார். சிறிது நேரம் கழித்து வேறு ஏதோ சில காரணங்களைக் தெரிவித்துள்ளார்.
இதே மாணவி, பள்ளியில் படித்தபோதும் காதல் விவகாரத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்துள்ளது. அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக கருதிய பேராசிரியர்கள், அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கினர். பின்னர், பெற்றோருடன் அவரை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பெரியார் பல்கலை பேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, ''தற்கொலைக்கு முயன்ற மாணவி எதனால் அத்தகைய முடிவை எடுத்தார் என்று அவருக்கே சொல்லத் தெரியவில்லை. அவருடன் படித்து வரும் மாணவிகள் சிலர் ஒருதலைக்காதலால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள். நாங்கள் விசாரிக்கும்போது, அந்த மாணவி மனரீதியாக குழப்பத்தில் இருந்தார். அவரை மேலும் பல்கலையில் வைத்திருந்தால் வேறு மாதிரியான சிக்கலை உருவாக்கும் என்பதால், தேர்வு நேரத்தில் மட்டும் பல்கலைக்கு வந்தால்போதும் என்று சொல்லி, பெற்றோருடன் அனுப்பி விட்டோம்,'' என்றார்.
பெரியார் பல்கலையில் விடுதியில் தங்கி எம்.எஸ்சி., தாவரவியல் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த ஜன. 11ம் தேதி, விடுதியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பல்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அவசியம் என்பது பெரும் விவாதமாக உருவாகியுள்ள நிலையில், பெரியார் பல்கலையிலும் அதுபோன்ற ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவை நிர்வகிக்க பேராசிரியர் ஒருவருக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதோடு, அதற்கென தனி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், பெயரளவுக்கு மட்டுமே இந்தக்குழு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் கடந்த இரண்டு மாதங்களில் ஒரு தற்கொலையும், ஒரு தற்கொலை முயற்சி சம்பவமும் நடந்துள்ளதாகவும் பேராசிரியர்கள் தரப்பில் அதிருப்தி கிளம்பியுள்ளது.
பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக பெரியார் பல்கலைக்கழகம் செயல்படலாம்; ஆனால், ஒரு பல்கலைக்கழகம் எல்லாவற்றிலும் பின்தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லையே?