ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கிய அரசின் அளவின் படி, கூடுதல் அரிசியுடன் ரேஷன் கடைகளில், விலையின்றி வழங்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற 06/07/2020 முதல் 09/07/2020 வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் (Token) வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தமது ரேஷன் கடைகளுக்கு ஜூலை 10 ஆம் தேதி முதல் சென்று அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் (Containment Zones) உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.