Skip to main content

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாகும் திட்டத்தில் அர்ச்சகரானவருக்கு மிரட்டல்! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Threat to the priest in the plan that all castes are priests!

 

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான முக்தீஸ்வரர் கோயிலில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் பணி ஆணை பெற்ற கோயில் அர்ச்சகர் மகேஷ்குமாரை சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் காவலர் வரதன் மதுபோதையில், அர்ச்சகரின் சாதி பெயரைக் கூறி திட்டியும், வேலையினைவிட்டு விலகுமாறு மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

 

இப்பிரச்சனை தொடர்பாக நேற்று (05.12.2021) இரவு தனது மனைவியுடன் சமயபுரம் காவல் நிலையத்தில் அர்ச்சகர் மகேஸ்குமார் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

 

அந்தப் புகாரில் ‘தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நான், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழமுதல்க வர் மு.க. ஸ்டாலின் கைகளால் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான முக்தீஸ்வரர் கோயில் அர்ச்சகர் பணி ஆணை பெற்று அக்கோயிலில் பணிபுரிந்துவருகிறேன். அதன் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் குடியிருப்பு வளாகத்தில் வசித்துவருகிறோம்.

 

அதே குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் கோவில் காவலர் வரதன், அர்ச்சகரான என்னை எனது சாதியை குறிப்பிட்டும், அர்ச்சகர் பணியில் நீடிக்கக் கூடாது எனவும், அருகிலுள்ள வீட்டாரிடம் நீ பேசக் கூடாது எனவும் தொடர்ந்து என்னை அடையாளம் தெரியாத சிலரோடு சேர்ந்து மதுபோதையில் மிரட்டிவருவது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 22ஆம் தேதி சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணியிடமும், காவல்துறையினரிடமும் புகார் அளித்தேன். புகார் தொடர்பாக இந்நாள்வரை எவ்வித விசாரணையும் இல்லை. 

 

இந்நிலையில், 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நானும் எனது மனைவியும் வீட்டில் அமர்ந்து உணவு உட்கொள்ளும்போது  மதுபோதையில் எனது வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து என்னையும் எனது மனைவியையும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், அர்ச்சகர் வேலையைவிட்டு விலகிவிட வேண்டும் எனவும், என் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் எனவும் காவலர் வரதன் என்னை மிரட்டித் தாக்க முற்பட்டார். எனவே விசாரணை செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கும், என் மனைவிக்கும் தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்