அமலாக்கத்துறை மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதா என டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ப. சிதம்பரத்தின் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்ற நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், மற்ற கட்சிகள் எல்லாம் மக்களிடம் நேரடியாகச் சென்று உறுப்பினர்கள் சேர்க்கின்றார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டும்தான் அமலாக்கத்துறை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்துகின்றனர். பாஜக அரசுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்பதற்காக விடப்படும் அச்சுறுத்தல்தான் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐயும், அமலாக்கத் துறையும் சென்றிருப்பது. இதை ப.சிதம்பரம் சமாளிப்பார் என தெரிவித்தார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ இது குறித்து தெரிவிக்கையில், இந்த வழக்கை ப.சிதம்பரம் சட்டரீதியாக சந்திப்பார். ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ சென்றது பாஜகவின் பயத்தை காட்டுகிறது என தெரிவித்தார்.